சமணர்களைப் பொருத்தவரை திருமலை என்பது வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பெயராகும். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி- போளூர் சாலையில் உள்ள வடபாதிமங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டரில் உள்ள இந்த இடம் வைகாவூர் என அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கு அரகந்தகிரி எனும் மலை உள்ளது.
கல்வெட்டுகளும் ஓவியங்களும்
சுருதக்கேவலி பத்திரபாகு மாமுனிகள் வட இந்தியாவிலிருந்து எண்ணாயிரம் முனிகளுடன் திருமலைக்கு வந்துள்ளார். விசாகாச்சாரியார் எனும் முனிவரும் சங்கத்துடன் வந்து தொண்டாற்றியுள்ளார். அரகந்தகிரியில் குகைக்கோயில், பாறைக்கோயில், சுவர் ஓவியங்கள் ஆகியவை உள்ளன. சேரர்,சோழர், பல்லவர்,ஹொய்சளர், சம்புவராயர் முதலிய அரசர் காலக் கல்வெட்டுகளும் உள்ளன.
மலையடிவாரத்தில் இரு கோயில்கள் அமைந்துள்ளன. ஒன்று, சோழர் குலக் குந்தவை உருவாக்கிய குந்தவை கோயிலாகும். இங்குள்ள குகைக்கோயிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தீர்த்தங்கரர்களான அறம் அருளிய ஆதிநாதர், நாற்கதி வென்ற நேமிநாதர், பச்சைநிற பாரீசநாதர், யட்சி தருமதேவி ஆகியோரின் அழகிய நான்கடி உயர கற்சிலைகள் ஆகியவை உள்ளன.
சமவசரணமும் ஜம்புதீபமும்
குகையில் பதினைந்தாம் நூற்றாண்டின் கண்கவர் ஓவியங்கள் காணப்படுகின்றன.இவை சித்தன்னவாசல் ஓவியங்களுக்கு ஒப்பானவை. தீர்த்தங்கரர்கள் வீற்றிருந்து அறம் அருளிய சமவசரணம்,உலக அமைப்பை விவரிக்கும் ஜம்புதீபம் போன்றவை தீட்டப்பட்டு மிளிர்கின்றன. துறவிகள் இருந்த கற்படுக்கைகள் மற்றும் இயற்கைச் சுனையையும் இங்கே காண முடியும். அருகிலேயே மகாவீரர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
மலை மீது தீர்த்தங்கரர்,நிரம்பரர் நேமிநாதரின் 18அடி உயர புடைப்பு சிலை செதுக்கப்பட்டுள்ளது. இராஜராஜசோழனை நினைவுறுத்த குந்தவையால் அமைக்கப்பட்ட இச்சிலை, இந்நாட்டிலேயே உயரமான நேமிநாதர் சிலையாகும். நேமிநாதர் இங்கு சிகாமணிநாதர் எனப்படுகிறார்.
காணும் பொங்கலன்று, சிவதேவி பெற்றெடுத்த சிகாமணிநாதருக்கு பூசை சிறப்பாக இருக்கும். அனைத்து மதத்தினரும் இந்தப் பூஜையில் கலந்துகொள்கிறார்கள். மலை உச்சியில் பற்றுகளைத் துறந்த பகவான் பார்சுவநாதர் ஆலயம் இருக்கிறது. விருஷபசேனர், சமந்தபத்ரர் வரதத்தாச்சாரியார் ஆகியோரின் பாத கமலங்கள் வடிக்கப்பட்டு கல்வெட்டுகளுடன் உள்ளன.
பகவான் நேமிநாதரின் யட்சி தர்மதேவி. இவர்தன் முற்பிறவியில் சமண முனிவருக்கு ஆகாரமளித்ததால்,கணவன் கோபமுற்றான். தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்த அவள், இறந்த பின் தர்மதேவி யட்சியானாள்.
திருமலையில் தனது குழந்தைகளைக் காண யட்சி வந்தாள். அவளின் முற்பிறவிக் கணவன் தன் மனைவியென அவளை நெருங்கினான். அவள், தான் யட்சியெனக் கூறித் தன் சொரூபத்தைக் காட்டினாள். அதன் பின் அவனும் தவம் நோற்று சர்வாங்க யட்சனாகப் பிறந்ததாகக் கதையும் சிலையுமுள்ளது.
யோகி சுத்தானந்தபாரதியார் இங்கு உண்ணா நோன்பிருந்து தனது “ஜினானந்தம்” நூலை எழுதி முடித்தார்.
மலையின் அருகில் பஞ்சகுல தேவதையர் கோயில் அமைந்துள்ளது. வராகினி, பத்மாவதி, சுவாலாமாலினி, தருமதேவி, சக்ரேஸ்வரி ஆகிய தேவதைகளின் சிலைகள் பெரியதாக நிறுவப்பட்டுள்ளன. பலரும் வந்து தரிசித்து செல்கின்றனர்.
இங்கு ஒரு ஜைனமடம் இருக்கிறது.மடாதிபதி ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீதவளக்கீர்த்தி சுவாமிகள் என அழைக்கப்படும் இவர்,சமணசாத்திரங்களும் சோதிடமும் நன்கறிந்தவர். சமணர்கள் போற்றும் நால்வகைத் தானங்கள் இங்கு செவ்வனே நடைபெறுகின்றன.